விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப்
கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும்
நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8
ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே
சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அவற்றைப் போக்கும் வகையிலான
பயனுள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம்.
1. அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒழுங்கு படுத்த:
விண்டோஸ் 8 தரும் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் மூலம், அப்ளிகேஷன் டைல்ஸ்களை, நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். முதலில் அவை, எந்த வரிசையிலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பது போல காணப்படும். இது இப்படி இருந்தால் நன்றாகவும், நமக்கு எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்குமே என்று பலர் எண்ணுவார்கள். இவற்றை நம் விருப்பப்படி மாற்றி அமைக்க வழிகள் தரப்பட்டுள்ளன. ஸ்டார்ட் ஸ்கிரீனில் வலது பக்கம் கீழாக உள்ள சிறிய மைனஸ் அடையாளத்தை (–) கிளிக் செய்திடவும். இது அனைத்து டைல்ஸ்களையும், சிறிய தோற்றம் உள்ளவையாக மாற்றி அமைக்கும். இப்போது குழுவாக உள்ள டைல்ஸ் மீது கிளிக் செய்து, திரையில் நீங்கள் விரும்பும் இடத்திற்கு இழுத்துச் சென்று விடவும். இந்த குழுக்களுக்கு நீங்கள் விரும்பும் பெயரையும் தரலாம். குழுக்களுக்கான டைல்ஸ் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் இடது கீழாக உள்ள Rename பட்டனில் கிளிக் செய்திட்டால், பெயரை மாற்றி அமைக்க வழி காட்டப்படும்.
2. ஐ.எஸ்.ஓ. டிஸ்க் இமேஜ் பைல்களைக் கையாளுதல்:
ஐ.எஸ்.ஓ. பைல் என அழைக்கப்படும் டிஸ்க் இமேஜ் பைல்கள் பொதுவாக சிடி அல்லது டிவிடி ஒன்றில் உள்ள பைல்களை ஸ்டோர் செய்து வைத்திடப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் காண முடியாது. ஆனால், விண்டோஸ் 8 தரும் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இவற்றைக் காணலாம். பைல் எக்ஸ்புளோரரில், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலைக் கண்டறியவும். பின்னர் அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, விண்டோவின் மேலாக வண்ணத்தில் அமைந்துள்ள Image Tools என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Mount என்ற ஐகான் மீது கிளிக் செய்திடவும். இப்போது, குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைல், ஒரு சிடி அல்லது டிவிடி ட்ரைவ் போல திறக்கப்படும். வழக்கம் போல டிஸ்க் ஒன்றில் உள்ள பைல்களை எப்படிக் கையாள முடியுமோ, அதே போல இந்த பைல்களையும் கையாளலாம். இனி, இதனை எப்படி மூடுவது? இடது புறப் பிரிவில், பைல் எக்ஸ்புளோரர் வழியாக, ஐ.எஸ்.ஓ. பைலுக்கான புதிய ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். ரைட் கிளிக் செய்து Eject என்பதைத் தேர்ந்தெடுத்தால், இந்த பைல் மூடப்படும்.
3. எளிதாக பிரிண்ட் செய்தல்:
விண்டோஸ்
7 மற்றும் அதற்கு முந்தைய சிஸ்டங்களில் பிரிண்ட் செய்வதற்கான இன்டர்பேஸ்
எளிய முறைகளில் உள்ளன என்றாலும், போட்டோ பைல்களைக் கையாளும் அப்ளிகேஷன்கள்
வழியே பிரிண்ட் செய்வது சற்று குழப்பத்தினைத் தரும் அனுபவமாகவே நமக்கு
இருந்து வருகிறது. ஏனென்றால், இவற்றில் வெளிப்படையான பிரிண்ட் அல்லது மெனு
ஆப்ஷன் தரப்பட்டிருக்காது. தேடித்தான் கண்டறிய வேண்டும். அப்படியே
கிடைத்தாலும், வழக்கமான பிரிண்ட் இடைமுகத்திற்கும், இவை தரும்
விண்டோக்களுக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கும். ஆனால், இந்த குழப்பம்
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இல்லை. ஏனென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பிரிண்ட்
செய்வது Devices என்னும் சார்ம்ஸ் மூலம் மேற்கொள்ளப் படுகிறது. இதற்கு
கர்சரை மேல் வலது அல்லது வலது கீழ் மூலைக்குக் கொண்டு செல்லவும். அல்லது
விண்டோஸ் மற்றும் சி (Windows + C) கீகளை ஒரு சேர அழுத்தவும். அடுத்து
Devices என்பதனைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில் பிரிண்டரைத்
தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பதிலாக கண்ட்ரோல் மற்றும் க கீகளை (Ctrl and
P) ஒரு சேர அழுத்தலாம்.
4. எளிதான ஸ்கிரீன் ஷாட்:
விண்டோஸ் 7 மற்றும் முந்தைய சிஸ்டங்களில், ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக மாற்ற, பிரிண்ட் ஸ்கிரீன் (PrtScn) அழுத்தி, கிளிப் போர்டில் தங்கும் படத்தினை, இமேஜ் ரைட்டர் (பெயிண்ட், அடோப் போட்டோ ஷாப்) புரோகிமில் பேஸ்ட் செய்து, பைலை உருவாக்குவோம். விண்டோஸ் 8 சிஸ்டம் இதனைத் தானாகவே உருவாக்குகிறது. விண்டோஸ் கீயினை அழுத்திக் கொண்டு, Print Screen கீயை அழுத்தவும். சில நொடிகள், ஸ்கிரீன் காட்சி சற்று ஒளியிழந்து பின் மீண்டும் உயிர் பெறும். அடுத்து Pictures லைப்ரேரியைத் திறந்து Screenshots என்ற போல்டரைத் திறக்க வேண்டும். அங்கு ‘Screenshot (1) என்ற பெயரில், நீங்கள் எடுத்த ஸ்கிரீன் ஷாட் காட்சி பைலாக இருக்கும். அடுத்தடுத்து எடுக்கும் படங்கள், தொடர் எண்ணுடன் பெயரிடப்படும். நீங்கள் அடுத்து இந்த படக்கோப்பின் பெயரையும் பார்மட்டினையும் தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்.
5. அப்ளிகேஷன் அனைத்திலும் தேடல் வசதி:
நீங்கள் எந்த விண்டோஸ் 8 அப்ளிகேஷனில் இருந்தாலும், தேடல் வசதி உங்களுக்கு உடனே கிடைக்கிறது. அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளாக நாம் தேடத் தொடங்கினால், அது சில வேளைகளில் இயலாமல் போகலாம். அல்லது தலையைச் சுற்றித் தொடும் வழியாக இருக்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இந்த வேலை எளிதாக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்து தேடல்களும் Search charm என்ற டூலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற, சார்ம்ஸ் பாரினை இயக்க வேண்டும். இதற்கு மவுஸ் கர்சரை மேலாக வலது அல்லது இடது மூலையில் சுழற்ற வேண்டும். இதன் பின் Search என்பதில் கிளிக் செய்திட வேண்டும். மாறாக, விண்டோஸ் கீயுடன் கி கீயை ஒருசேர அழுத்த வேண்டும். இப்போது சர்ச் பாக்ஸ் மூலம் தேடுங்கள். தேடல் முடிவுகள், நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம் சார்ந்தே கிடைக்கும். டெஸ்க்டாப்பிலிருந்து Search charm திறக்கப்பட்டால், அப்ளிகேஷன் தேடல் ஒன்று மேற்கொள்ளப்படும்.
6. சிஸ்டம் டாஸ்க் மேற்கொள்ள:
பழைய
விண்டோஸ் இயக்கங்களிலிருந்து, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுகையில்,
ஸ்டார்ட் ஸ்கிரீனில் ஸ்டார்ட் பட்டன் இல்லாதது, டெஸ்க்டாப்பில் டாஸ்க் பார்
இல்லாதது ஆகிய இரண்டு நிலைகளும், சற்று தடுமாற்றத்தை உண்டாகும். ஆனால்,
இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒரு சிறிய சலுகையினை
வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இது குறித்து எந்த அறிவிப்பினையும்
அது தரவில்லை. மவுஸ் கர்சரை கீழாக இடது ஓரம் கொண்டு செல்லவும். சிறிய இமேஜ்
தோன்றும் வரை கர்சரை அங்கு வைத்திருக்கவும். இனி, ரைட் கிளிக்
செய்திடவும். இப்போது ஒரு பாப் அப் மெனு தோன்றும். இதில் பல சிஸ்டம்
வேலைகளுக்கான ஷார்ட்கட் வழிகள் காட்டப்படும். (எ.கா. கண்ட்ரோல் பேனல்
அல்லது பைல் எக்ஸ்புளோரர் திறந்திட) டெஸ்க்டாப்பினைத் திறக்கவும் ஒரு
ஷார்ட் கட் உண்டு. இவற்றைப் பயன்படுத்தி நாம் வழக்கமான வேலைகளை
மேற்கொள்ளலாம்.
7. பைல் ஹிஸ்டரி வழி பேக் அப்:
விண்டோஸ்
8 சிஸ்டத்தில் சிஸ்டம் தரும் பேக் அப் வசதியினைத் தேடினால், அது வீணான
வேலையாகவே இருக்கும். இந்த வசதி இப்போது பைல் ஹிஸ்டரியாகத் (File History)
தரப்பட்டுள்ளது. இந்த வசதி தானாகவே, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை
லைப்ரரியில் சேவ் செய்யப்படும் பைல்களுக்கு பேக் அப் எடுக்கிறது. இதற்கு
ஒரு டிஸ்க் உள்ளாகவோ, வெளியாகவோ தேவைப்படலாம். அல்லது நெட்வொர்க்கில்
உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் களிலும் இதனை
அமைக்கலாம். இதனை செட் செய்திட, கண்ட்ரோல் பேனல் திறந்து, ‘Save backup
copies of your files with File History’ என்பதில் கிளிக் செய்திடவும்.
புதிய ட்ரைவ்கள் இணைக்கப்பட்டிருந்தால், அவை காட்டப்படும். நெட்வொர்க்கில்
உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவகளும் காட்டப்படும். பேக் அப் பைல்கள் எதில்
சேவ் செய்யப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து
அமைக்கலாம். Select drive முடித்த பிறகு Turn on என்பதில் கிளிக்
செய்திடவும். பைல்கள் அனைத்தும் இவ்வகையில் பாதுகாப்பாக சேவ்
செய்திடப்பட்டு இருக்கும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இந்த ட்ரைவில்
இருந்து பைல்களை காப்பி செய்து பயன்படுத்தலாம்.Copyrights : Dinamalar