PaidVerts

Thursday 10 January, 2013

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும் நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8 ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அவற்றைப் போக்கும் வகையிலான பயனுள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம்.

1. அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒழுங்கு படுத்த:

விண்டோஸ் 8 தரும் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் மூலம், அப்ளிகேஷன் டைல்ஸ்களை, நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். முதலில் அவை, எந்த வரிசையிலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பது போல காணப்படும். இது இப்படி இருந்தால் நன்றாகவும், நமக்கு எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்குமே என்று பலர் எண்ணுவார்கள். இவற்றை நம் விருப்பப்படி மாற்றி அமைக்க வழிகள் தரப்பட்டுள்ளன. ஸ்டார்ட் ஸ்கிரீனில் வலது பக்கம் கீழாக உள்ள சிறிய மைனஸ் அடையாளத்தை (–) கிளிக் செய்திடவும். இது அனைத்து டைல்ஸ்களையும், சிறிய தோற்றம் உள்ளவையாக மாற்றி அமைக்கும். இப்போது குழுவாக உள்ள டைல்ஸ் மீது கிளிக் செய்து, திரையில் நீங்கள் விரும்பும் இடத்திற்கு இழுத்துச் சென்று விடவும். இந்த குழுக்களுக்கு நீங்கள் விரும்பும் பெயரையும் தரலாம். குழுக்களுக்கான டைல்ஸ் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் இடது கீழாக உள்ள Rename பட்டனில் கிளிக் செய்திட்டால், பெயரை மாற்றி அமைக்க வழி காட்டப்படும்.


2. ஐ.எஸ்.ஓ. டிஸ்க் இமேஜ் பைல்களைக் கையாளுதல்:

ஐ.எஸ்.ஓ. பைல் என அழைக்கப்படும் டிஸ்க் இமேஜ் பைல்கள் பொதுவாக சிடி அல்லது டிவிடி ஒன்றில் உள்ள பைல்களை ஸ்டோர் செய்து வைத்திடப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் காண முடியாது. ஆனால், விண்டோஸ் 8 தரும் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இவற்றைக் காணலாம். பைல் எக்ஸ்புளோரரில், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலைக் கண்டறியவும். பின்னர் அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, விண்டோவின் மேலாக வண்ணத்தில் அமைந்துள்ள Image Tools என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Mount என்ற ஐகான் மீது கிளிக் செய்திடவும். இப்போது, குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைல், ஒரு சிடி அல்லது டிவிடி ட்ரைவ் போல திறக்கப்படும். வழக்கம் போல டிஸ்க் ஒன்றில் உள்ள பைல்களை எப்படிக் கையாள முடியுமோ, அதே போல இந்த பைல்களையும் கையாளலாம். இனி, இதனை எப்படி மூடுவது? இடது புறப் பிரிவில், பைல் எக்ஸ்புளோரர் வழியாக, ஐ.எஸ்.ஓ. பைலுக்கான புதிய ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். ரைட் கிளிக் செய்து Eject என்பதைத் தேர்ந்தெடுத்தால், இந்த பைல் மூடப்படும்.


3. எளிதாக பிரிண்ட் செய்தல்:
விண்டோஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய சிஸ்டங்களில் பிரிண்ட் செய்வதற்கான இன்டர்பேஸ் எளிய முறைகளில் உள்ளன என்றாலும், போட்டோ பைல்களைக் கையாளும் அப்ளிகேஷன்கள் வழியே பிரிண்ட் செய்வது சற்று குழப்பத்தினைத் தரும் அனுபவமாகவே நமக்கு இருந்து வருகிறது. ஏனென்றால், இவற்றில் வெளிப்படையான பிரிண்ட் அல்லது மெனு ஆப்ஷன் தரப்பட்டிருக்காது. தேடித்தான் கண்டறிய வேண்டும். அப்படியே கிடைத்தாலும், வழக்கமான பிரிண்ட் இடைமுகத்திற்கும், இவை தரும் விண்டோக்களுக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கும். ஆனால், இந்த குழப்பம் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இல்லை. ஏனென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பிரிண்ட் செய்வது Devices என்னும் சார்ம்ஸ் மூலம் மேற்கொள்ளப் படுகிறது. இதற்கு கர்சரை மேல் வலது அல்லது வலது கீழ் மூலைக்குக் கொண்டு செல்லவும். அல்லது விண்டோஸ் மற்றும் சி (Windows + C) கீகளை ஒரு சேர அழுத்தவும். அடுத்து Devices என்பதனைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில் பிரிண்டரைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பதிலாக கண்ட்ரோல் மற்றும் க கீகளை (Ctrl and P) ஒரு சேர அழுத்தலாம்.


4. எளிதான ஸ்கிரீன் ஷாட்:


விண்டோஸ் 7 மற்றும் முந்தைய சிஸ்டங்களில், ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக மாற்ற, பிரிண்ட் ஸ்கிரீன் (PrtScn) அழுத்தி, கிளிப் போர்டில் தங்கும் படத்தினை, இமேஜ் ரைட்டர் (பெயிண்ட், அடோப் போட்டோ ஷாப்) புரோகிமில் பேஸ்ட் செய்து, பைலை உருவாக்குவோம். விண்டோஸ் 8 சிஸ்டம் இதனைத் தானாகவே உருவாக்குகிறது. விண்டோஸ் கீயினை அழுத்திக் கொண்டு, Print Screen கீயை அழுத்தவும். சில நொடிகள், ஸ்கிரீன் காட்சி சற்று ஒளியிழந்து பின் மீண்டும் உயிர் பெறும். அடுத்து Pictures லைப்ரேரியைத் திறந்து Screenshots என்ற போல்டரைத் திறக்க வேண்டும். அங்கு ‘Screenshot (1) என்ற பெயரில், நீங்கள் எடுத்த ஸ்கிரீன் ஷாட் காட்சி பைலாக இருக்கும். அடுத்தடுத்து எடுக்கும் படங்கள், தொடர் எண்ணுடன் பெயரிடப்படும். நீங்கள் அடுத்து இந்த படக்கோப்பின் பெயரையும் பார்மட்டினையும் தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்.


5. அப்ளிகேஷன் அனைத்திலும் தேடல் வசதி:

நீங்கள் எந்த விண்டோஸ் 8 அப்ளிகேஷனில் இருந்தாலும், தேடல் வசதி உங்களுக்கு உடனே கிடைக்கிறது. அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளாக நாம் தேடத் தொடங்கினால், அது சில வேளைகளில் இயலாமல் போகலாம். அல்லது தலையைச் சுற்றித் தொடும் வழியாக இருக்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இந்த வேலை எளிதாக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்து தேடல்களும் Search charm என்ற டூலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற, சார்ம்ஸ் பாரினை இயக்க வேண்டும். இதற்கு மவுஸ் கர்சரை மேலாக வலது அல்லது இடது மூலையில் சுழற்ற வேண்டும். இதன் பின் Search என்பதில் கிளிக் செய்திட வேண்டும். மாறாக, விண்டோஸ் கீயுடன் கி கீயை ஒருசேர அழுத்த வேண்டும். இப்போது சர்ச் பாக்ஸ் மூலம் தேடுங்கள். தேடல் முடிவுகள், நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம் சார்ந்தே கிடைக்கும். டெஸ்க்டாப்பிலிருந்து Search charm திறக்கப்பட்டால், அப்ளிகேஷன் தேடல் ஒன்று மேற்கொள்ளப்படும்.


6. சிஸ்டம் டாஸ்க் மேற்கொள்ள:
பழைய விண்டோஸ் இயக்கங்களிலிருந்து, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுகையில், ஸ்டார்ட் ஸ்கிரீனில் ஸ்டார்ட் பட்டன் இல்லாதது, டெஸ்க்டாப்பில் டாஸ்க் பார் இல்லாதது ஆகிய இரண்டு நிலைகளும், சற்று தடுமாற்றத்தை உண்டாகும். ஆனால், இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒரு சிறிய சலுகையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இது குறித்து எந்த அறிவிப்பினையும் அது தரவில்லை. மவுஸ் கர்சரை கீழாக இடது ஓரம் கொண்டு செல்லவும். சிறிய இமேஜ் தோன்றும் வரை கர்சரை அங்கு வைத்திருக்கவும். இனி, ரைட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு பாப் அப் மெனு தோன்றும். இதில் பல சிஸ்டம் வேலைகளுக்கான ஷார்ட்கட் வழிகள் காட்டப்படும். (எ.கா. கண்ட்ரோல் பேனல் அல்லது பைல் எக்ஸ்புளோரர் திறந்திட) டெஸ்க்டாப்பினைத் திறக்கவும் ஒரு ஷார்ட் கட் உண்டு. இவற்றைப் பயன்படுத்தி நாம் வழக்கமான வேலைகளை மேற்கொள்ளலாம்.


7. பைல் ஹிஸ்டரி வழி பேக் அப்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் சிஸ்டம் தரும் பேக் அப் வசதியினைத் தேடினால், அது வீணான வேலையாகவே இருக்கும். இந்த வசதி இப்போது பைல் ஹிஸ்டரியாகத் (File History) தரப்பட்டுள்ளது. இந்த வசதி தானாகவே, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை லைப்ரரியில் சேவ் செய்யப்படும் பைல்களுக்கு பேக் அப் எடுக்கிறது. இதற்கு ஒரு டிஸ்க் உள்ளாகவோ, வெளியாகவோ தேவைப்படலாம். அல்லது நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் களிலும் இதனை அமைக்கலாம். இதனை செட் செய்திட, கண்ட்ரோல் பேனல் திறந்து, ‘Save backup copies of your files with File History’ என்பதில் கிளிக் செய்திடவும். புதிய ட்ரைவ்கள் இணைக்கப்பட்டிருந்தால், அவை காட்டப்படும். நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவகளும் காட்டப்படும். பேக் அப் பைல்கள் எதில் சேவ் செய்யப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். Select drive முடித்த பிறகு Turn on என்பதில் கிளிக் செய்திடவும். பைல்கள் அனைத்தும் இவ்வகையில் பாதுகாப்பாக சேவ் செய்திடப்பட்டு இருக்கும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இந்த ட்ரைவில் இருந்து பைல்களை காப்பி செய்து பயன்படுத்தலாம்.

Copyrights : Dinamalar 

10 ஜிபி பைல் அஞ்சலில் அனுப்பலாம்

இணையத்தின் வழி பைல் அனுப்புவதில் இதுவரை இருந்த தடையை, கூகுள் உடைத்தெறிந்துள்ளது. 10 ஜிபி அளவு உள்ள பைலையும் தன் கூகுள் ட்ரைவிலிருந்து , ஜிமெயில் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது. இது வழக்கமாக அஞ்சல் வழி தற்போது அனுப்பப்படும் பைலைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும். ஜிமெயிலில், கூகுள் ட்ரைவில் உள்ள பைலை, அது 10 ஜிபிக்குள் உள்ளவரையில் அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. புதிய மெயில் கம்போஸ் விண்டோ பயன்படுத்துபவர்கள், இந்த அறிவிப்பினைப் பெற்றிருக்கலாம். இது குறித்து மேலும் அறிய விரும்புபவர்கள் http://gmailblog. blogspot.com /2012/11/gmailanddrivenewwaytosendfiles.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Copyrights: Dinamalar 

கூகுள் மெயில்: சில தேடல் வழிகள்

கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும். குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம். நாம் தேடுகையில் அதற்கான பல வரையறைச் சொற்களைப் பயன்படுத்தி, நம் தேடல்களின் முடிவுகளை விரைவாகப் பெறலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
from: குறிப்பிட்ட நபரிடமிருந்து வந்துள்ள மெயில்களை மட்டும் பெற. எ.கா.from:
kannan:கண்ணன் என்பவரிடமிருந்து வந்த மெயில்கள் மட்டும் காட்ட.
to:நாம் அனுப்பிய மெயில்களில், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட. எ.கா: to:kannan.கண்ணன் என்பவரிடமிருக்கு (நீங்களோ அல்லது மற்றவர்கள், அந்த மெயிலைப் பயன்படுத்தி) அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட.
subject: மெயில்களில் உள்ள சப்ஜெக்ட் கட்டத்தில் உள்ள சொற்களில் தேடிப் பெற. எ.கா.subject:dinner சப்ஜெக்ட் வரியில் உள்ள சொற்களில் “dinner” என்ற சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட.
OR:இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதனைத் தேடி, அச்சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட. எ.கா. from:
kannan OR from:lakshmi.கண்ணன் அல்லது லஷ்மி என யாரிடமிருந்தும் வந்த மெயில்களைக் காட்ட. இதில் இந்த கட்டளைச் சொல் OR எப்போதும் கேபிடல் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
(hyphen): குறிப்பிட்ட சொல் உள்ள கடிதங்களைக் காட்டாமல் இருக்க. எ.கா. dinner movie:கடிதங்களில், என்ற சொல் மட்டுமே உள்ளவை. அவற்றில் movie என்ற சொல் இருந்தால் அது தேவையில்லை.
label: குறிப்பிட்ட ஒரு லேபில் கொண்ட கடிதங்களில் மட்டும் தேட. எ.கா.from:kannan label: myfamily; myfamily என்ற லேபிலில் உள்ள கடிதங்களில், kannan அனுப்பிய கடிதம் மட்டும்.
has:attachment: அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டவும். எ.கா. from:
kannan has:attachment: இங்கு கண்ணனிடமிருந்து வந்த மெயில்களில், அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும்.
list:குறிப்பிட்ட மெயிலிங் லிஸ்ட்டில் இருந்து பெற்ற மெயில்கள் மட்டும். எ.கா. list:info@example.com. info@example.com என்ற சொற்களை ஹெடரில் பெற்ற மெயில்கள் மட்டும். அதாவது இந்த மெயிலிங் லிஸ்ட்டிலிருந்து பெற்ற மற்றும் அந்த லிஸ்ட்டுக்கு அனுப்பப்பட்ட மெயில்கள் மட்டும்.
filename: இணைக்கப்பட்ட, குறிப்பிட்ட பைல் அல்லது பைல் வகையினைப் பெற. எ.கா.filename:physicshomework.txt “physicshomework.txt” என்ற அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும். label:work filename:pdf: “work” என்ற லேபில் இடப்பட்டு, பி.டி.எப். பைல் அட்டாச்மெண்ட் ஆக உள்ள மெயில்கள் மட்டும்.
“ "(மேற்கோள் குறிகள்): இந்த குறிகளுக்குள் இடப்பட்ட டெக்ஸ்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டப்பட. எ.கா. “i’m feeling lucky”: “i’m feeling lucky” என்ற சொற்களை உடைய மெயில்கள் மட்டும். இந்த தேடலில் பெரிய, சிறிய எழுத்து வித்தியாசம் பார்க்காமல் தேடப்படும். எடுத்துக் காட்டாக இந்த தேடலில் “I’m feeling lucky” எனச் சொற்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் காட்டப்படும்.
இன்னொரு எடுத்துக் காட்டினையும் இங்கு பார்க்கலாம். subject:”dinner and a movie” என்று கொடுத்தால், சப்ஜெக்ட் கட்டத்தில், “dinner and a movie” என்ற சொற்கள் உள்ள மெயில்கள் மட்டும் என்று பொருள்.
in:anywhere: பொதுவாக நாம் கொடுக்கும் தேடல்கள் வினாக்கள், இன் பாக்ஸில் மட்டும் தேடிக்கொடுக்கப்படும். அவ்வாறு இல்லாமல், Spam மற்றும் Trash பெட்டிகளில் உள்ள மெயில்களிலும் தேடப்பட வேண்டும் எனில், கட்டளை வரியை இவ்வாறு அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டு: in:anywhere
movie: All Mail, Spam,மற்றும் Trash ஆகிய அனைத்திலும் “movie” என்ற சொல் உள்ள மெயில்களைத் தேடித் தா என்பது இதன் பொருள்.
cc:இந்த இரு பீல்டுகளிலும் உள்ளதைத் தேடு என்பது பொருள். எடுத்துக்காட்டாக, cc:kannan எனக் கொடுத்தால், கண்ணனுக்கு என்ற பீல்ட் வழி கொடுக்கப்பட்ட மெயில்களை மட்டும் தேடிக் காட்டு என்பது பொருள். இதே போல் bcc:என்ற பீல்டுக்காகவும் தேடலாம்.
after:before: குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பப்பட்ட மெயில்களைக் காட்டு என்பது இதன் பொருள். எடுத்துக்காட்டு after:2004/04/16 before:2004/04/18: 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 லிருந்து 18 வரை அனுப்பப்பட்ட மெயில்கள்.
is:chat:இந்தக் கட்டளை சேட் மெசேஜ்களில் மட்டும் தேடலுக்காகப் பயன்படுத்தப்படும். எடுத்துக் காட்டாக எனக் கொடுத்தால், சேட் மெசேஜ்களில் “monkey” என்ற சொல் பயன்படுத்தப்படும் மெசேஜ் மெயில்களை மட்டும் காட்டவும்.

CopyRights : Dinamalar 

Wednesday 26 December, 2012

விண்டோஸ் லைவ் மெஷ் மூடப்படுகிறது

பைல்களை ஒருங்கிணைத்து பாதுகாத்து தேக்கி வைக்கும் சேவையினை கடந்த 2008 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh) என்ற பெயரில் தொடங்கியது. இது Live Mesh, Windows Live Sync, and Windows Live FolderShare எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில், இந்த சேவையினை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதாக அறிவித்திருந்தது. பைல்களை நம் சாதனங்களில் இல்லாமல், ரிமோட் இயக்கத்தில் சேமித்து, தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தக் கொடுத்த வசதிகளில், விண்டோஸ் லைவ் மெஷ் முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், பின்னர், மைக்ரோசாப்ட் பல்வேறு வசதிகளை அளிக்க முற்படுகையில், ஸ்கை ட்ரைவ் என்ற இன்னொரு கட்டமைப்பினை ஏற்படுத்தியது. லைவ் மெஷ் மூலம் தந்து வந்த வசதிகளை இன்னும் கூடுதல் எளிமையுடன் தர முடியும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. தற்போது லைவ் மெஷ் வசதிகள் அனைத்தையும் ஸ்கை ட்ரைவில் தருவதனால், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஸ்கை ட்ரைவிற்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது. வரும் பிப்ரவரி 13 முதல் லைவ் மெஷ் வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும்,எந்த வித சப்போர்ட்டும் தரப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.லைவ் மெஷ் பயன்படுத்திய அனைவருக்கும் இது குறித்து தனித்தனியே மெயில் மெசேஜ் அனுப்பி, மைக்ரோசாப்ட் தான் எடுத்த முடிவினை அறிவித்தது. தற்போது 25,000 பேருக்கும் குறைவாகவே விண்டோஸ் லைவ் மெஷ் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்கை ட்ரைவ் வசதியினை 20 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
லைவ் மெஷ் மூலம், அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை தூரத்தில் இருந்து இயக்கும் வசதியைப் பெற்றிருந்தனர். ஆனால், ஸ்கை ட்ரைவில் அந்த வசதியினை மைக்ரோசாப்ட் தரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வசதியினை தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்பினை தான் வழங்கும் ரிமோட் டெஸ்க் டாப் தொடர்பினைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், லைவ் மெஷ் வாடிக்கையாளர்கள் இதனை விரும்பவில்லை.

Copyrights : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13456&ncat=4 

Friday 21 December, 2012

குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க

வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி: மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.

Copyrights : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13370&ncat=4 

விண்டோஸ் 8க்கான விண்ஸிப்

1991 ஆம் ஆண்டு வெளியானது முதல், விண்ஸிப் பயன்பாடு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்புவதற்கும், விரித்துப் படிப்பதற்கும், விண்ஸிப் அப்ளிகேஷன்கள் பெரும் பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே நிறுவனம், விண்ஸிப் சார்ந்து ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட் (ZipShare, ZipSend) ஆகிய சேவைகளையும் வழங்குகிறது. iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான விண்ஸிப் வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்குமான விண்ஸிப் வெளியாகியுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென வெளியாகியுள்ள பைல்களைக் கையாளும் முதல் அப்ளிகேஷன் இதுதான். பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்பவும், விரித்துச் செயல்படுத்தவும் இது உதவுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கேற்ப, தொடு திரை செயல்பாட்டில் இயங்குகிறது. 128 அல்லது 256 பிட் ஏ.இ.எஸ். என்கிரிப்ஷன் தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பேஸ்புக் சமூக இணைய தளத்திற்கான பைல் ஷேர் பயன்பாட்டிற்கு ZipShare உதவுகிறது. மிகப் பெரிய பைல்களை அனுப்ப ZipSend உதவுகிறது. மேலதிகத் தகவல்களுக்கு http://www.winzip.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Copyrights : Dinamalar
 http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13367&ncat=4

ஆப்பிள் சாதனங்களில் தமிழ்

விண்டோஸ் பயன்படுத்தப்படும் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த பல வகை எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல ட்ரைவர் தொகுப்புகளும் உள்ளன. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களான மேக் கம்ப்யூட்டர், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் தமிழ் பயன்படுத்த, யாரும் அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. இந்த வகையில் கம்ப்யூட்டரில் வெகு காலமாக தமிழைப் பயன்படுத்துவதில் ஆய்வு மேற்கொண்டு வரும், மலேசியாவைச் சேர்ந்த முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், மொபைல் போன் மற்றும் ஐ பேட் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த "செல்லினம்' என்ற ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கித் தந்துள்ளார்.
இவரே 1994 ஆம் ஆண்டு வாக்கில், விண்டோஸ் சாதனங்களில் பயன்படுத்த முரசு அஞ்சல் என்னும் மென்பொருளை உருவாக்கி,
உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் தன் இணைய தளத்தில் தந்தார். இதில் என்ன சிறப்பு எனில், தமிழுக்கென இவர் தரும் அனைத்து மென்பொருள் தொகுப்புகளும், எழுத்துரு கோப்புகளும் முற்றிலும் இலவசமாகவே தரப்பட்டு வருகின்றன. தமிழ் மொழிக்குத் தன் சேவையாகவே இதனைக் கருதுகிறார். ஆப்பிள் சாதனங்களுக்கான தமிழ் தெரிந்து கொள்ளும் முன், தமிழ் மொழி ஏன் மிகத் தாமதமாகவே கம்ப்யூட்டரில் செயல்படுத்தப்பட்டது எனப் பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் பயன்பாடு தொடங்கிய காலத்திலிருந்து, ஆங்கிலம், அதுவும் அமெரிக்க ஆங்கிலமே அதன் மொழியாக இருந்து வந்தது. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு, ஆங்கிலம் அல்லா மற்ற மொழிகளும், கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய கட்டாயத்தினைக் கொண்டு வந்தன. இதனை அடுத்து, ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கூடப் பயன்படுத்தாத நாடுகளின் மொழிகள், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சீனா, ஜப்பான், கொரியா மற்றும் அரபு நாடுகளின் மொழிகள், கம்ப்யூட்டரில் இடம் பெற்றன.
இந்தியாவில் பெர்சனல் கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்தியவர்கள், ஆங்கில மொழிப் பயன்பாட்டில் சிறப்பாக இயங்கியதால், மாநில மொழிகள் தேவை முதல் கட்டத்தில் இல்லாமல் இருந்தது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் போல, அரசு, நம் மொழிகள் கட்டாயமாக கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றவில்லை.
1985 ஆம் ஆண்டுக்குப் பின்னரே, ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தன. இந்திய மாநில மொழிகள், 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னரே செம்மைப் படுத்தப்பட்டன. பல்வேறு காரணங்களால், தமிழ் இடம் பெறுவதில் குழப்பங்கள் ஏற்பட்டன. கம்ப்யூட்டர் வல்லுநரான தமிழர்கள், அவரவர் எண்ணப்படி பலவகைகளில் தமிழ் மொழி பயன்பாட்டினைக் கொண்டு வந்தனர். இன்று தமிழ் மொழி பயன்பாடு, யூனிகோட் என்ற வகையில், ஒருமுகப்படுத்தப்பட்ட பின்னரும், சில சொந்த காரணங்களுக்காக, தமிழ் இன்னும் பல முகங்களில் கம்ப்யூட்டரில் இடம் பெற்று வருகிறது. இது சாதாரணப் பயனாளர், எளிமையாகத் தமிழைப் பயன்படுத்தத் தடையாக உள்ளது. இந்தக் குழப்பம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல இயலவில்லை.
தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் பயன்படுத்த மெல்லினம் அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. தமிழில் மெல்லினம், வல்லினம் மற்றும் இடையினம் என மெய்யெழுத்துக்கள் பிரிவிற்குப் பெயர்கள் இருப்பதைப் போல, டிஜிட்டல் தமிழை, குறிப்பாக மொபைல் சாதனங்களுக்கான தமிழை, மெல்லினம் என, இதனைத் தயாரித்தவர் பெயரிட்டுள்ளார்.
மொபைல் போனில் தமிழ் என்றவுடன், நமக்கு எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திதான் நினைவுக்கு வரும். மொபைலில் தமிழ் பெற, அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இருவருமே, தமிழ் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்க வேண்டும். செல்லினம் ஆப்பிள் சாதனங்களில் இயங்க, ஐ.ஓ.எஸ்.4 (iOS4) ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும். இது இல்லாதவர்கள், ஐ போன் 3ஜி, ஐபோன் 3ஜி எஸ் மற்றும் ஐபாட் டச் வைத்திருப்பவர்கள், இலவசமாகவே இதனை அப்கிரேட் செய்து கொள்ளலாம். http://www.apple.com/ iphone/softwareupdate/ என்ற முகவரியில் உள்ள தளத்தில், இதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன்படி, ஐட்யூன்ஸ் சாப்ட்வேர் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து, அதற்கான அக்கவுண்டினைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், கீழே உள்ள லிங்க் நமக்குத் திறக்கப்பட்டு, செல்லினம் மென்பொருள் கிடைக்கும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்த பின்னர், http://www.iphoneappshome. com/sellinamiphone337936766.html என்ற ஆப்பிள் நிறுவன இணையதளத்திற்குச் சென்று, செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொள்ளலாம்.
http://download. cnet.com/Sellinam/300012941_475091250.html என்ற முகவரியிலும் இந்த மென்பொருள் கிடைப்பதாகக் கூகுள் தேடுதளம் தகவல் தரும். இங்கு சென்றாலும், முதலில் சொல்லப்பட்ட ஆப்பிள் இணைய தளத்திற்குத் தான் நாம் அழைத்துச் செல்லப்படுவோம். இந்த மென்பொருளை, ஆப்பிள் சாதனங்களில் பதிவதும் எளிதே. தற்போது செல்லினம் பதிப்பு 3.0 கிடைக்கிறது. பைலின் அளவு 1.7 எம்.பி. இதனை இறக்கிப் பதிந்து பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை. இதனைப் பயன்படுத்தும் வழிகளை http://www.ucsc.cmb.ac.lk/ltrl/projects/TamilSMS/html/usermanual.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியலாம். செல்லினம் மென்பொருளுக்கென இயங்கும் தளத்திலும் (http://sellinam.com/) வேண்டிய தகவல்கள் கிடைக்கின்றன.
செல்லினம் மூலம், நாம் தமிழில் செய்திகளை அமைத்து அனுப்பலாம். இதில் அமைக்கப்பட்ட செய்திகளை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களிலும் அமைக்கலாம். போனடிக் எனப்படும் (ஆங்கில) ஒலி அடிப்படையில் இதன் கீ போர்டு இயங்குகிறது. இதனை பதிந்து வைத்திருந்தால், சில நூல்களையும், இலக்கியங்களையும் படிக்கலாம்.
செல்லினம் தவிர, தமிழர்களிடையே பிரபலமான, ஆங்கிலம்- தமிழ், லிப்கோ அகராதியும், ஆப்பிள் மொபைல் சாதனங்களில் பயன்படும் வகையில் தரப்படுகிறது.ஆனால், இதனைப் பெற 5 டாலர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனையும் ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்தில், http://itunes.apple.com/ app/lifcosellinamtamildictionary/id391740615?mt=8 என்ற முகவரியில் பெறலாம். இந்த அகராதியில், சொற்களைத் தேடிப் பெரும் வசதி தரப்பட்டுள்ளது.

Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13366&ncat=4