PaidVerts

Monday 17 December, 2012

உலகை அணைக்க உதவும் கரங்கள்

உங்களின் நண்பர்கள், உறவினர்கள் எங்கு இருந்தாலும் சரி, அவர்களுடன் நினைத்த நேரத்தில் டெக்ஸ்ட் மூலம், எந்தவிதக் கட்டணமும் இன்றி உரையாட விரும்புகிறீர்களா? நட்பின் பாலத்தை இறுக்கமாகப் பிணைக்க எந்த கயிறு நமக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று தேடுகிறீர்களா? உங்களுக்கு உதவத்தான் WhatsApp என்ற அப்ளிகேஷன் உள்ளது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தால் போதும். உங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் செய்தி அவர்களுக்குச் சென்றுவிடும். இதற்கு ஒரே ஒரு தேவை, உங்களிடமும், நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்களிடமும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள சாதனம் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். இன்றைய வழக்கம் போல, இணைய இணைப்பில் இரண்டு போன்களும் இருக்க வேண்டும்.
முதலில் உங்கள் ஆண்ட்ராய்ட் டேப்ளட் அல்லது ஸ்மார்ட் போன் என ஏதேனும் ஒரு சாதனத்தில், இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுண்லோட் செய்திடவும்.இதனை “Play Store” என்ற இணைய தள ஸ்டோர் மூலம் மேற்கொள்ளலாம். தேடல் தளம் ஒன்றின் மூலம் “WhatsApp” என்று டைப் செய்து, பட்டியலிடப்படும் தளங்களில் ஒன்றிலிருந்து இதனை டவுண்லோட் செய்திடவும்.
இந்த அப்ளிகேஷனுக்கான ஐகான் பச்சை நிற வண்ணத்தில், சித்திரக் கதையில், கதா பாத்திரங்கள் பேசும் குமிழ் போல, உள்ளாக ஒரு டெலிபோன் படத்துடன் இருக்கும். முதன் முதலில் நீங்கள், இந்த அப்ளிகேஷனை இயக்கத் தொடங்குகையில், உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும். அடுத்து, உங்கள் பெயர், உங்கள் நண்பர்களுக்கு எப்படிக் காட்டப்பட வேண்டும் எனக் கேட்டு, அதனையும் வாங்கிக் கொள்ளும். இதில் உங்கள் படம் அல்லது உங்களைக் காட்டும் நீங்கள் விரும்பும் படம் ஒன்றையும் அமைக்கலாம். இதனைப் பின்னொரு காலத்திலும் நீங்கள் மேற்கொள்ளலாம். அடுத்து, ஒரு காலியாக உள்ள பக்கம் “Chats” என்ற தலைப்பில் காட்டப்படும். இதன் நடுவே பென்சில் ஸ்கெட்ச் ஒன்று காட்டப்படும். இதுதான் உங்களுடைய முகப்புப் பக்கம் (homepage).
அடுத்து இந்த WhatsApp அப்ளிகேஷன், உங்கள் தொலைபேசியில் உள்ள எண்கள் உள்ள போன்களில், எதில் எல்லாம், இந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அவற்றைப் பட்டியலிடும். இதன் வலது மேலாக, லென்ஸ் மற்றும் பென்சில் படம் ஒன்று காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், உங்கள் Chats மூலம், நீங்கள் தேடலை மேற்கொள்ளலாம். உங்கள் நண்பர் எவருடனாவது, டெக்ஸ்ட் சேட்டிங் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால், திரையில் காட்டப்படும் அவரின் பெயர் மேலாகத் தொடவும். இது உடனேயே ஒரு அரட்டைப் பெட்டியைத் (‘chat box’) திறக்கும். இதில் செய்தி ஒன்றை நீங்கள் டைப் செய்து, உடன் அனுப்பலாம். மேலாக வலது பக்கம், ஒரு பேப்பர் கிளிப் படமும், ஸ்மைலி ஐகானும் காட்டப்படும். பேப்பர் கிளிப் ஐகானில் கிளிக் செய்து, ஏதேனும் போட்டோ, வீடியோ, ஆடியோ, இடம் மற்றும் பிறர் தொடர்பு தகவல்களை இணைத்து அனுப்பலாம்.
Gallery என்பதில் கிளிக் செய்தால், உங்கள் போனில் உள்ள காலரி திறக்கப்பட்டு, அதில் உள்ள படங்கள் காட்டப்படும். இந்த அப்ளிகேஷன் மூலம் எந்த படத்தை அனுப்ப விரும்புகிறீர்களோ, அந்த படத்தின் மீது கிளிக் செய்து, செய்தியுடன் இணைத்து அனுப்பலாம். அப்போதே, கேமராவினைத் திறந்து, போட்டோ எடுத்து, இணைத்து அனுப்பலாம். இதே போல வீடியோ பைல்களையும் அனுப்பலாம். அடுத்து வாய்ஸ் ரெகார்டரில் பதிவு செய்த ஆடியோ பைல்கள், அப்போது பதியப்படும் குரல் பைல், என எதனையும் இணைத்து அனுப்பலாம்.
அடுத்து, Location என்பதன் கீழ், நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களை அனுப்பலாம். இதனை உங்கள் நண்பருக்குத் தெரிவிப்பதன் மூலம், உலகின் எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனை, உங்கள் நண்பருக்குத் தெரியப்படுத்தலாம். அதற்கேற்ற வகையில் உங்கள் நண்பர் உங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்மைலி ஐகானில் கிளிக் செய்தால், பல எமோட்டிகான் எனப்படும் உணர்ச்சிப் படங்கள் பட்டியல் கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நீங்கள் எளிதில் பின்னர் தேர்வு செய்வதற்காக, அண்மையில் நீங்கள் பயன்படுத்திய (recent emoji) ஸ்மைலி ஐகான்கள் பட்டியலிடப்படும். இதில் காட்டப்படும் ஒவ்வொரு ஐகான் கிளிக்கிலும், ஐகான்கள் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கும்.
இந்த செயல்பாட்டின் போது, முந்தைய ஸ்கிரீன் செல்ல வேண்டும் என்று விரும்பினால், பேக் ஸ்பேஸ் கீயினை அழுத்தினால் போதும். உங்களிடம் ஆண்ட்ராய்ட் போன் இருந்து, இதுவரை நீங்கள் இதனைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், உடனே இந்த வசதியைப் பயன்படுத்தவும்.

Copyrights : Dinamalar
 http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13355&ncat=4

No comments:

Post a Comment